திருச்சி: போலி வாக்காளர் அட்டை தயாரித்துக் கொடுத்ததாகக் கூறி, ஆடவர் ஒருவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டைச் சேர்ந்தவர் முகம்மது தமீம், 33. இவர் அப்பகுதியில் கணினி சேவை நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சாஜித், 18, என்பவர் கடப்பிதழ் பெறுவதற்குத் தேவைப்பட்டதால் தமீமின் கடை மூலம் வாக்காளர் அட்டை கோரி விண்ணப்பித்தார்.
மூன்று மாதங்களாகியும் வாக்காளர் அட்டை வராததால் நேரில் சென்று தமீமிடம் கேட்டுள்ளார் சாஜித். அதனைத் தொடர்ந்து, தமீம் உடனடியாக அங்கேயே போலி வாக்காளர் அட்டையைத் தயாரித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
அதனைக் கொண்டு, கடப்பிதழுக்கு விண்ணப்பித்தார் சாஜித். ஆவணச் சரிபார்ப்பின்போது, அந்த வாக்காளர் அடையாள அட்டை போலி என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதுபற்றி, லப்பைக்குடிக்காடு கிராம நிர்வாக அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர் காவல்துறையில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில், காவல்துறையினர் தமீமின் கடையில் சோதனையிட்டனர். அப்போது, அங்கிருந்து போலி வாக்காளர் அட்டைகளை அவர்கள் கைப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமீமைக் கைதுசெய்த காவல்துறை, அவர்மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தது.

