புதுவை: திமிங்கில எச்சத்தைக் கள்ளச்சந்தையில் விற்க முயற்சி செய்த ஆடவரைப் புதுவை காவல்துறை கைது செய்தது. அவரிடம் இருந்து ரூ.14 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கிலத்தின் எச்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், பி.எஸ்.பாளையத்தைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன். 47 வயதான இவர், வாசனைத் திரவியம் தயாரிக்கப் பயன்படும் திமிங்கில எச்சத்தை, தன் வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக விழுப்புரம் குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அவரைக் கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டமிட்ட காவல்துறை அதிகாரிகள், மாயகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினர்.
ஒரு வியாபாரியைப் போல் பேசி, தன்னை அணுகிய காவல் அதிகாரியிடம், தன்னிடம் ஏழு கிலோ திமிங்கில எச்சம் இருப்பதாகவும் ஒரு கிலோ 2 கோடி ரூபாய் எனவும் விலை பேசினார் மாயகிருஷ்ணன். இறுதியில் ஒரு கிலோவுக்கு ரூ.60 லட்சம் என முடிவானது.
இதையடுத்து, பணத்துடன் மாயகிருஷ்ணனைச் சந்தித்த காவல் அதிகாரியிடம் தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கில எச்சத்தை அவர் காண்பித்தார். இதையடுத்து, நுண்ணறிவுப் பிரிவு காவல் அதிகாரிகள் அவரிடம் இருந்த திமிங்கில எச்சத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் மாயகிருஷ்ணனும் கைதானார்.