நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்று, உயிரைவிட்ட ஆடவர்

1 mins read
3d363388-35d4-4049-8068-91fb806dfcf2
நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்றபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவிலிருந்த தடுப்பின்மீது மோதியது. மாதிரிப்படம் -

சென்னை: புதிதாகத் தத்தெடுத்த நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்று, ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சென்னையில் நிகழ்ந்தது.

அம்பத்தூர் அருகேயுள்ள காவாங்கரைப் பகுதியைச் சேர்ந்தவர் கே.தீபன், 28. ஆட்டோ ஓட்டுநரான அவருக்கு பவானி, 24, என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை ஒரகடத்தில் உள்ள தம் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தார் தீபன். அங்கு அந்த நாய்க்குட்டியை அவர் கண்டார். அவரின் குழந்தைகளுக்கு நாய்கள் என்றால் கொள்ளை ஆசை. இதனையடுத்து, அந்த நாய்க்குட்டியைத் தம் வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவர் முடிவுசெய்தார்.

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் அதனை வைத்தபடி அவர் தமது வீட்டிற்குத் திரும்பினார். செங்குன்றம் சாலையில் கள்ளிக்குப்பம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அந்நாய்க்குட்டி ஸ்கூட்டரில் இருந்து நழுவவிழ இருந்ததை அவர் கண்டார். இதனையடுத்து, சற்று குனிந்து அதனைக் காப்பாற்ற முயன்றபோது, ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவிலிருந்த தடுப்பின்மீது மோதியது.

பலத்த காயமடைந்த தீபன் அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தீபனுக்கு உதவ பொதுமக்கள் திரண்டபோது, அந்த நாய்க்குட்டி அங்கிருந்து ஓடிவிட்டது.