கடலூர்: ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் விநாயகருடன் தங்கச்சங்கிலியை ஆற்றில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கடந்த திங்கட்கிழமை சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கும் நிகழ்வும் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் வண்ணாரப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62), ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.
அவர் விநாயகர் சதுர்த்தியையொட்டி தனது வீட்டில் சிறிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தார்.
மேலும் அந்தச் சிலைக்குத் தனது 1.5 பவுன் தங்கச்சங்கிலியை அணிவித்துச் சிறப்புப் பூஜை செய்து வழிபட்டு வந்தார்.
இந்நிலையில் மூன்றாவது நாளான புதன்கிழமை (செப்டம்பர் 16) விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் கடலூர் தேவனாம்பட்டினம் அருகிலுள்ள உப்பனாற்றுக்குச் சென்றார்.
அங்கு அவர் உப்பனாற்றின் பாலத்தில் தங்கச்சங்கிலியுடன் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்து தண்ணீரில் தூக்கி வீசினார்.
அதன் பின்னர்தான் தங்கச்சங்கிலியை எடுக்காமல் ஆற்றில் வீசிவிட்டோமே என்ற நினைவு அவருக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராமமூர்த்தி, உடனே அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் தண்ணீரில் இறங்கித் தங்கச்சங்கிலியைத் தேடத்தொடங்கினார். மேலும் இது பற்றி கடலூர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்களும் விரைந்து வந்து மாலை 6 மணி வரை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை தேடுதலுக்குப் பிறகும் நகை கிடைக்காததால் ராமமூர்த்தி ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
