கன்னியாகுமரி: கண்காணிப்புப் படக்கருவிகளின் (சிசிடிவி) துணையுடன் வெளிநாட்டில் இருந்தபடியே தமிழகத்திலுள்ள தமது வீட்டில் நடக்கவிருந்த திருட்டை ஒருவர் தடுத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை அடுத்துள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த சலீம் என்பவர், மஸ்கட்டில் வேலைசெய்து வருகிறார்.
வெளிநாட்டில் இருந்தாலும் தம் வீட்டைக் கண்காணிப்பதற்காக சலீம் சிசிடிவி படக்கருவிகளைப் பொருத்தியுள்ளார்.
இந்நிலையில், வெகுநாள்களாகவே சலீமின் வீடு பூட்டப்பட்டிருந்ததை அறிந்த கொள்ளையர்கள், புத்தாண்டிற்கு முதல்நாள் இரவு 12 மணியளவில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீடு முழுவதும் தேடியும் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்த நிலைப்பேழையை உடைக்க அவர்கள் முயன்றனர்.
வெளியாள்கள் தம் வீட்டினுள் நடமாடுவதையும் வீட்டிலிருந்த நிலைப்பேழையை அவர்கள் உடைக்க முயன்றதையும் தமது கைப்பேசியிலுள்ள சிசிடிவி செயலி வழியாகத் தற்செயலாகக் கண்டார் சலீம்.
உடனே தம் அண்டைவீட்டினரைத் தொலைபேசியில் அழைத்து, தம் வீட்டினுள் கொள்ளையர்கள் புகுந்திருப்பது குறித்து அவர் தகவல் தெரிவித்தார்.
அதனையடுத்து, அவரது வீட்டின்முன் திரண்ட அண்டைவீட்டார் ‘திருடன் திருடன்’ எனச் சத்தமிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதனால் பதறிப்போன கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்கக் கதவைத் திறந்து, சுற்றுச்சுவர்மீது ஏறிக் குதித்து தப்பியதையும் படக்கருவியில் பதிவான காணொளியில் காண முடிந்தது.
இச்சம்பவம் தொடர்பில் கோட்டார் காவல்துறையில் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.