சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) மாம்பழச் சின்னத்தை ஒதுக்கீடு செய்தது குறித்து தேர்தல் ஆணையம் அன்புமணி வீட்டு முகவரிக்கு கடிதம் அனுப்பியது.
அந்தக் கடிதம் அன்புமணிக்கு அனுப்பப்பட்டதை எதிர்த்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு திங்கட்கிழமை விசாரிக்கப்படவுள்ளது.
அன்புமணி முகவரிக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தை மீட்டுக் கொண்டு, தனது முகவரிக்கு கடிதம் அனுப்ப உத்தரவிடக் கோரி கட்சி நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “கடந்த 2025 மே மாதமே அன்புமணியின் பதவிக்காலம் முடிந்த நிலையில், கட்சியின் தலைவராக நீடிப்பதாக போலி ஆவணங்களை தாக்கல் செய்துள்ளார். கட்சி நிறுவனர் என்ற முறையில் எனது அங்கீகாரம் இல்லாமல் சட்டவிரோதமாக கட்சிக் கூட்டங்களை நடத்தி அன்புமணி கட்சியின் உரிமையைக் கோர முடியாது.
“கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கக் கூடாது. சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக தனக்குத்தான் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்க வேண்டும்,” என்று அந்த மனுவில் மருத்துவர் ராமதாஸ் கூறியிருந்தார். அந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரிக்கவிருக்கிறது.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில், பிப்ரவரி 2ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) அதிகாரபூர்வமான தேர்தல் சின்னம் ‘மாம்பழம்’ என்றும், தேர்தல் ஆணையம் தங்களுக்குத்தான் இந்தச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி வருகிறார்.
இதையடுத்து, மாம்பழச் சின்னத்திற்கான உரிமை யாருக்கு என்பதில் பாமகவிற்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சட்டப் போராட்டமாக மாறியுள்ளது.

