தமிழகக் காங்கிரஸ் புதிய தலைவராக மாணிக்கம் தாக்கூர் நியமனம்

தமிழகக் காங்கிரஸ் புதிய தலைவராக மாணிக்கம் தாக்கூர் நியமனம்

1 mins read
dc46eca6-0102-4315-83d6-8cd0e10a41df
மாணிக்கம் தாக்கூர். - கோப்புப் படம்: விகடன்

சென்னை: தமிழக காங்கிரசின் புதிய தலைவராக திரு மாணிக்கம் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டார்.

கடந்த 2024ஆம் ஆண்டு தமிழிக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது அவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியானது. எனினும் தேர்தல் நேரம் என்பதால் மாநிலத் தலைவரை மாற்ற காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.

மாநிலத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பலத்த போட்டி நிலவுவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறிப்பாக, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, செல்வகுமார் ஆகியோரிடையே போட்டி நிலவுவதாக அந்த ஊடகங்கள் குறிப்பிட்டிருந்தன.

இந்நிலையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான மாணிக்கம் தாக்கூர் தமிழிக காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிவகங்கையைச் சேர்ந்த இவர் கடந்த 2009, 2019, 2024 மக்களவைத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்தவர். அண்மைய தேர்தலின்போது திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்பட்டாலும் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார் மாணிக்கம் தாக்கூர்.

இதனிடையே தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைவதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்புச் சொற்கள்
காங்கிரஸ்தலைவர்செல்வப்பெருந்தகைபதவி