தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொன்னமராவதி அருகே மஞ்சுவிரட்டு

1 mins read
6b7b9aae-5d27-47ff-8768-aaec29336a71
பொன்னமராவதி அருகேயுள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் ஒரு காளையை பலர் அடக்காமல் ஒருவர் மட்டுமே வீரத்தைக் காட்டுகிறார். - படம்: தினமணி

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டத்தின் பொன்னமராவதி அருகேயுள்ள கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன் கோயில் திருவிழாவை ஒட்டி கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை (31.5.2025) மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது.

அந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 800க்கும் மேற்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

காளைகளை அடக்கிய மாடுபிடியாளர்களுக்கும், பிடிபடாத வீரக் காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை திமுக மாநில மருத்துவரணித் துணைச்செயலர் அண்ணாமலை ரகுபதி, வட்டாட்சியர் எம்.சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சுற்றுவட்டார சிற்றூர்களைச் சேர்ந்த ஏராளமானோர் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.  கீழவேகுப்பட்டி மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரர்கள் 6 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், ஆலங்குடி அருகே வேங்கிடக்குளம், புனித அடைக்கல அன்னை ஆலய தேர்த்திருவிழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

வடமாடு மஞ்சுவிரட்டில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், காரைக்குடி, மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் வந்திருந்தன. மொத்தம் 11 காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர்.

மேலும், பொன்னமராவதி தாலுகா கே.புதுப்பட்டி, கொன்னையம்பட்டி மற்றும் கீழவேகுப்பட்டி ஆகிய 3 இடங்களில் மஞ்சுவிரட்டு நடத்த மே 26ஆம் தேதி அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி கே.புதுப்பட்டியில் வரும் மே 28ம் தேதியும் கொன்னையம்பட்டியில் மே 29ஆம் தேதியும் மஞ்சுவிரட்டு நடந்தது.

குறிப்புச் சொற்கள்