சென்னை: சென்னையில் பல பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளன. இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.
போக்குவரத்து விளக்கு, மேம்பாலங்களுக்கு அருகே உள்ள நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வுகளை போக்குவரத்துக் காவல்துறையினர் ஆராய்ந்து, அதனை சோதனை முறையில் செயல்படுத்தி, வெற்றி பெற்று செயல்படுத்தியும் வருகிறார்கள்.
அந்த வகையில், சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்றுவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், பல முக்கிய சாலைகளில், மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறைந்து போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை என்றும் சீரான இடைவெளியில் போக்குவரத்தை எளிதாக்க, பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

