சென்னை: தனது சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருப்பதை எதிர்த்து லாட்டரி அதிபர் மார்ட்டினும் அவரது குடும்பத்தாரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் தாக்கல் செய்த மனுக்களுக்குப் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு விதிகளை மீறிப் பரிசுச்சீட்டுகளை விற்றதில், சிக்கிம் மாநில அரசுக்கு ரூ. 910 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக மார்ட்டின்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து, அவர்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
கேரள நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே, மார்ட்டின் மீது அமலாக்கத்துறையும் பண மோசடி தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.
மேலும், மார்ட்டின், அவரது குடும்பத்தினருடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி, அதன் முடிவில் 457 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இந்நடவடிக்கையை அமலாக்கத் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயமும் உறுதிசெய்தது.
இந்நிலையில், மார்ட்டின், அவரது மனைவி லீமா, மகள் டெய்சி ஆகியோர் சார்பாகவும் அவர்களது நிறுவனங்கள் சார்பாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சொத்துகளை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அம்மனுக்களில் கோரப்பட்டுள்ளது.
மனுக்களை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.
தொடர்புடைய செய்திகள்
திரு மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுக எம்எல்ஏ ஆவார். மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தமிழக அமைச்சராக உள்ளார்.


