தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

படம்: இந்து தமிழ் திசை

30 Sep 2026 - 8:12 pm

1 mins read

சென்னை: மதுரை, நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடைத் திட்டங்களை முழுமையாக தனியாருக்கு ஒப்படைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நடவடிக்கை அதிர்ச்சியளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடிப்படை உள்கட்டமைப்பு, பொதுச் சேவைகளை பெருநிறுவனங்களின் லாப வேட்டைக்குத் தாரைவார்ப்பது மக்கள் விரோதச் செயல் எனச் சாடியுள்ளார். மக்கள்நல அரசு என்பது குடிமக்களுக்கான அடிப்படைச் சேவைகளை வழங்குவதிலிருந்து பின்வாங்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தூய்மை, சுகாதாரம் சார்ந்த திட்டங்களைத் தனியாரிடம் ஒப்படைப்பதால், கழிவுநீர்க் கட்டணம், வரிகள் அதிக அளவில் உயர்த்தப்பட்டு ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உள்ளாட்சி அமைப்புகளிடம் முறையிடும் ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் பெருநிறுவனங்களின் தயவை எதிர்பார்க்கும் சூழல் உருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு ரூ.2,377.48 கோடி, நாகர்கோவிலுக்கு ரூ.189.82 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள அத்திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே வைத்து, அரசே முழு நிதியையும் ஒதுக்கிச் செயல்படுத்த வேண்டும் என திரு சண்முகம் வலியுறுத்தி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்