தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும் அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் தேதியன்று தமிழகச் சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து, தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே உள்ள காலியிடம் உள்ளிட்ட ஐந்து இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ. சாமிநாதன் ஆகியோர் தஞ்சாவூருக்குச் சென்று அவ்விடங்களைப் பார்வையிட்டனர். ஆனால், அருங்காட்சியகத்துக்கான பணிகள் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சோழர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான ஏலக் குத்தகை நடத்தப்பட்டது. அப்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே தேர்வு செய்யப்பட்ட 12 ஏக்கர் இடம் போதாது என தெரிவிக்கப்பட்டது.
எனவே, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ.56.41 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும் 125 அடி உயரத்தில் மாமன்னன் ராஜராஜ சோழன் சிலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அமைக்கப்பட்ட சிலை போன்று, ராஜராஜ சோழன் சிலையை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

