கடலூர்: கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சில மணி நேரத்திற்கு வாகனப்போக்குவரத்து சுணக்கமானது. பின்னர் காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
மத்திய அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த கோருதல், நான்கு தொழிலாளர் நல சட்ட தொகுப்புகளை ரத்து செய்யக் கோருதல் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதன்கிழமை (ஜூலை.9) நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று இந்தியாவின் அனைத்து தொழிற்சங்கங்களும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தன.
அதன்படி இன்று (ஜூலை.9) கடலூர் மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.
மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பேருந்துகள் இயங்கின. கடைகள் திறந்து இருந்தன. ஆட்டோக்கள் இயங்கின. பள்ளி, கல்லூரிகள் இயங்கின. கடலூரில் இருந்து புதுச்சேரி செல்லும் தனியார் பேருந்துகள் குறைந்த அளவு இயக்கப்பட்டது. இந்த பொது வேலை நிறுத்தத்தால் கடலூர் மாவட்டத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.

