வேலூர்: தமிழகத்தின் தொழில் உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்குக் கொண்டுசெல்லும் முயற்சியாக, விருதுநகரில் ரூ.1,900 கோடி முதலீட்டில் பிரம்மாண்ட ஜவுளிப் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி இத்தகவலைத் தெரிவித்தார்.
மணப்பாறை முறுக்கு முதல் அதிநவீன பகுதி மின்கடத்தி சில்லு உற்பத்தி வரை அனைத்துத் துறைகளிலும் தமிழக மக்களின் கடின உழைப்பும் தனித்துவமான திறமையும் அனைத்துலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகப் பாராட்டினார்.
மின்னணுச் சாதனங்கள், ‘ஆப்பிள்’ கைப்பேசி உற்பத்தியில் உலகளாவிய விநியோக மையமாகத் தமிழகம் உருவெடுத்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், மத்திய அரசின் ஆதரவுடன் பிள்ளைப்பாக்கம், மணலூர் போன்ற தொழிற்பேட்டைகளில் 70க்கும் மேற்பட்ட மின்னணு உற்பத்தி ஆலைகள் வெற்றிகரமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், கடந்த 11 ஆண்டுகளில் மத்திய வரிப்பகிர்வு மூலம் தமிழகத்துக்கு ரூ.4.6 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் 2,000 கிலோ மீட்டர் புதிய தேசிய நெடுஞ்சாலைகள், ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் கிஷண் ரெட்டி, நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்தப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 1,300ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
இளையர்கள் தங்களுடைய அறிவாற்றலை எதிர்வரும் 2047க்குள் இந்தியாவை வல்லரசாக்கும் இலக்கிற்குப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
