சென்னை: தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்களில் ஒன்றான ‘தாய்மாமன் தங்க மோதிர' திட்டத்தின்கீழ், தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்வதில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளி நடைமுறையால் அரசுக்கு ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.25 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கே.ஜி.அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோதிரத் திட்டம் குறித்த முக்கியமான விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இத்திட்டத்தின்கீழ் ஒரு கிராம் எடையுள்ள தங்க மோதிரங்களைக் கொள்முதல் செய்யும் பொறுப்பு தமிழ்நாடு மருத்துவச் சேவைகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் கொள்முதலுக்காக இரு முன்னணி நகை நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தங்கம் தவிர்த்து, அவற்றின் தயாரிப்புக் கூலி, சேதாரம், இதர கட்டணங்களை அந்த நிறுவனங்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்ய முன்வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வெளிப்படையான ஒப்பந்த நடைமுறை காரணமாக அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.25 கோடி வரை மிச்சமாகிறது என்றார்.


