சென்னை: கடந்த சில நாள்களாக மதிமுகவில் நீடித்து வந்த மோதலும் குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது.
மீண்டும் மதிமுக முதன்மைச் செயலாளராகச் செயல்பட துரை வைகோ ஒப்புக்கொண்டார். மேலும், அவருடன் இணைந்து பணியாற்றுவதாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உறுதியளித்ததை அடுத்து, சமரசம் ஏற்பட்டது.
மல்லை சத்யா, துரை வைகோ இடையே பனிப்போர் இருந்து வந்தது.
அண்மையில் நடைபெற்ற மதிமுக தொழிலாளரணி கூட்டத்தில், இருதரப்புக்குமான மோதல் வெளிப்படையாகத் தெரிந்தது.
இந்நிலையில், திடீர் திருப்பமாக, கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார் துரை வைகோ.
இதையடுத்து, இருதரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது தமது செயல்பாடுகள் துரை வைகோவின் மனத்தைக் காயப்படுத்தி இருந்தால், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக மல்லை சத்யா கூறியதாகத் தெரிகிறது.
அதன் பின்னர் வைகோ முன்பாக மல்லை சத்யாவும் துரை வைகோவும் இணைந்து செயல்பட இருப்பதாகத் தெரிவித்தனராம்.
தொடர்புடைய செய்திகள்
இருவரையும் கைகொடுக்க வைத்து, மோதலுக்கு வைகோ முற்றுப்புள்ளி வைத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.