சென்னை: தமிழ் நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் வகையில் ‘எஸ்ஐஆர்’ எனப்படும் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (மதிமுக) கூறியுள்ளது. எனவே, வெள்ளிக்கிழமை கூடிய மதிமுக நிர்வாகக் குழு கூட்டத்தில் அந்தத் திட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பின்னர் சிறப்புரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, “சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில், ‘எஸ்ஐஆர்’ திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சிக்கல்கள் நிறைந்தது என்று தமிழ்நாடு முதல்வர் கூறியுள்ளார். அவசரகதியில் செய்யப்படும் ‘எஸ்ஐஆர்’ நடவடிக்கை என்பது மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பாரதிய ஜனதா கட்சிக்குச் சாதகமாக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது,” என்றார்.
தமிழ்நாட்டில் நவம்பர் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி, டிசம்பர் 9 வரையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளும் டிசம்பர், 9 அன்று புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
“இந்த மாதம் பீகாரில், சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏராளமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதாக அங்குள்ள எதிர்கட்சிகள் கூறி வருகின்றன.
“வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் விளைவு என்பது பீகாரில் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினை முன்வைக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையம் அதற்கு முறையான பதிலைத் தெரிவிக்கவில்லை,” என்றார் வைகோ.
“வாக்காளர் திருத்தப் பட்டியல் என்ற பெயரில் பீகாரில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. அதேபோல், இப்போது தமிழ் நாட்டிலும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைந்துள்ளது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான தேர்தல் ஆணையம். அதை முறியடிக்க ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள அரசியல் கட்சிகள் யாவும் முன்வருவது அவற்றின் தலையாயக் கடமை,” என்றும் மதிமுக தெரிவிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

