மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் குடமுழுக்கு விழா செப்டம்பர் 17ஆம் தேதி காலை (இந்திய நேரம்) 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெறவுள்ளது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுவதால், இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி கோயில் மேல்தளம், பொற்றாமரைக்குளம், ஆயிரங்கால் மண்டபம், ஆடி வீதிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், விழாவை முன்னிட்டு, மதுரை மாநகரில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் 6,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பின்னர், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
“வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் காவலர்கள் 6,000 பேர் குடமுழுக்கு விழாப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்,” என்று கூறிய அவர், “குடமுழுக்கு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்குக் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,” என்றும் தெரிவித்தார்.
“அத்துடன், கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகக் கோயில் வளாகத்திலும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் தொடர்ச்சியாகக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
“பக்தர்களின் வசதிக்காக மதுரை மாநகர் முழுவதும் 1,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
குடமுழுக்கு விழா நிறைவடைந்த பின்னர் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கோயில் வளாகத்தில் இருந்து வெளியேறாத வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.
கோயிலின் மேல் தளத்திற்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக 2,000 சிறப்பு அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17ஆம் தேதி மதுரை மாநகரப் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுமுறை அறிவிக்கப்படும்.
அதற்கு முன்னதாகச் செப்டம்பர் 16ஆம் தேதியும் மாநகரப் பகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, அறநிலையத்துறை சார்பில் கூடுதல் ஆணையர்களான ஜெயராமன், மாரிமுத்து தலைமையில் 198 பேர் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தக் குழுவினருக்குக் குடமுழுக்கு விழாவிற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் ஒதுக்கப்பட்டு, அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மொத்தமாக ரூ.5 கோடியில் விபத்து தொடர்பான குழுக் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

