எம்ஜிஆர் பிறந்த நாள்: தமிழக அரசு, பாஜக மரியாதை

1 mins read
4f554892-12b7-479a-9bfb-e3702b507a47
தமிழக அரசின் சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள், அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் எம்ஜிஆரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் அமைச்சர்கள் ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே.சேகர்பாபு, சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சென்னை மேயர் பிரியா, அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். - படம்: ஊடகம்

சென்னை: காலஞ்சென்ற முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு கட்சிப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். கட்சிக்கொடியை ஏற்றி, கேக் வெட்டி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு வழங்கினார்.

தமிழக அரசின் சார்பில், சென்னை கிண்டி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

“ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும் சிறந்த சமுதாயத்தைக் கட்டமைக்கவும் எம்ஜிஆர் மேற்கொண்ட முயற்சிகளால் நாம் பெரிதும் ஊக்கம் அடைந்துள்ளோம்,” என்று பிரதமர் மோடி தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழக அரசியல் வரலாற்றின் மையமாக இருந்து, அசைக்க முடியாத வெற்றியாளரானார். அவரே தமிழக அரசியலின் அதிசயமும் ஆனார்,” என தவெக தலைவர் விஜய் கூறினார்.

குறிப்புச் சொற்கள்