நாகப்பட்டினம்: தமிழக மீனவர்கள்மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்கொள்ளையர்களில் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார். கரை திரும்பிய பின்னர் அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடற்கொள்ளையர் ஒருவர் தமிழக மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஏப்ரல் 25ஆம் தேதி மீன்பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். 26ஆம் தேதி இரவு 11 மணி அளவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த படகில் மூன்று கடற்கொள்ளையர்கள் இருந்ததைக் கண்டு மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் சுதாரிப்பதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட கொள்ளையர்கள், படகில் இருந்த மீன்கள், ‘ஜிபிஎஸ்’ கருவி, கைப்பேசிகள் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு தப்ப முயன்றனர். மேலும், மீனவர்களின் மீன்பிடி வலைகளையும் அறுக்க முற்பட்டனர்.
இதையடுத்து, இருதரப்பினரும் மோதிக்கொள்ள, கொள்ளையர்களில் ஒருவர் மீனவர்களிடம் சிக்கினான். மற்ற இருவரும் தங்கள் படகில் ஏறி தப்பிச் சென்றனர்.
பின்னர்க் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கொள்ளையனின் பெயர் அயந்தன் என்பதும் இலங்கைக் காங்கேசன்துறையைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோதலின்போது காயமடைந்த அயந்தனும் மீனவர்களும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தாக்குதல் நடத்திய இலங்கைக் கடற்கொள்ளையர்களில் ஒருவரைத் தமிழக மீனவர்கள் பிடித்துவந்து தமிழகக் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருப்பது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

