சிங்கப்பூர்-சென்னை விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை

1 mins read
e1048117-4633-49a6-a912-023f4d781ef2
சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 21) நள்ளிரவு சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சென்னை: சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 21) நள்ளிரவு சென்றுகொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு விமானத்திலேயே பிரசவம் பார்க்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த தீப்தி சரசு வீர வெங்கட்ராமன் எனும் 28 வயது பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரின் குடும்பத்தார் விமானச் சிப்பந்திகளிடம் தெரியப்படுத்தினர். சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கும் பின்னர் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விமானத்தில் பயணம் செய்த பெண் மருத்துவர் ஒருவர், விமானச் சிப்பந்திகள் மற்றும் பெண் பயணிகள் சிலரின் உதவியுடன் பிரசவம் பார்த்தார். சற்று நேரம் கழித்து, தீப்தி சரசு ஆண் குழந்தை ஈன்றெடுத்தார்.

அதிகாலை 4.30 மணியளவில் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன், விமானத்திற்குள் விரைந்த மருத்துவக் குழு, தாயையும் சேயையும் பரிசோதித்தது. அவ்விருவரும் நலமுடன் உள்ளதை அது கண்டறிந்தது.

பின்னர் ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிலையில், விமானச் சிப்பந்திகளுக்கும் பயணிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட அப்பெண்ணின் குடும்பத்தார், அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினர்.

குறிப்புச் சொற்கள்