மத்திய கிழக்குப் பதற்றம்: 3வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து

மத்திய கிழக்குப் பதற்றம்: 3வது நாளாக சென்னையில் விமானங்கள் ரத்து

2 mins read
6f62f4e3-b7fd-46f2-a1fe-04b52a44fb49
சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் விமானங்களும் அந்தப் பகுதிகளிலிருந்து வரும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. - படம்: பிஸ்னெஸ் லைன்

சென்னை: ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லவேண்டிய விமானங்கள் மூன்றாவது நாளாக, திங்கட்கிழமையும் ரத்து செய்யப்பட்டன.

எதிரெதிர் தாக்குதல் நடத்தப்பட்டதால் மத்திய கிழக்கு நாடுகள் தங்களது விமான நிலையத்தை மூடிவிட்டன. இதனால், விமானச் சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சனிக்கிழமை (பிப்ரவரி 28) துபாய், அபுதாபி, பக்ரைன், மஸ்கட் செல்லும் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

மறுநாளான ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து வளைகுடா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்டுச் செல்லும் 33 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, பக்ரைன், குவைத், மஸ்கட் போன்ற இடங்களுக்குச் செல்லவேண்டிய 17 விமானங்களும் அங்கிருந்து சென்னைக்கு வரவேண்டிய 16 விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில், போர்ப் பதற்றத்தால் 3வது நாளாக திங்கட்கிழமையும் (மார்ச் 2)சென்னை விமான நிலையத்தில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

துபாய், அபுதாபி, சார்ஜா, குவைத், மஸ்கட் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லக்கூடிய மற்றும் அந்தப் பகுதிகளிலிருந்து வரக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புறப்பாட்டு விமானங்கள் 18, வருகை விமானங்கள் 18 என மொத்தம் 36 விமானங்கள் திங்கட்கிழமை ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகளிடையே குழப்பமும் சிரமமும் ஏற்பட்டுள்ளன. அதனால், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்ய இருக்கும் பயணிகளும் விமான நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, விமானம் வந்து செல்லும் நேர விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னர் தங்கள் பயணத்தைத் தொடங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்