சென்னை: அஸ்வகந்தாப் பால், மஞ்சள் மிளகுப் பால், மூலிகைப் பால் வகைகளை அறிமுகம் செய்வது குறித்துப் பரிசீலித்து வருவதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு (ஆவின்) விரைவில் அத்தகைய மூலிகைப் பால் வகைகளை அறிமுகம் செய்ய உள்ளது.
சென்னையில் 2024-25ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில் புதன்கிழமை நடைபெற்ற கூட்டமைப்பின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனோ தங்கராஜ், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். “ஆவினில் அன்றாடம் 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் பால் மற்றும் பாற்பொருள்களின் விற்பனை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.
“இந்த ஆண்டு இறுதிக்குள் பால் கொள்முதல் மேலும் அதிகரிக்கும். ஆவின் அதன் விற்பனை, சந்தைப்படுத்தல் உத்திகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
“மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்காக மூலிகைப் பாலை அறிமுகப்படுத்த தீவிரமாக ஆராய்ச்சி செய்து வருகிறோம். அஸ்வகந்தா பால், மஞ்சள் மிளகுப் பால் போன்ற மூலிகை பால் வகைகளை அறிமுகப்படுத்த உள்ளோம், சுக்குமல்லி காபி வழங்குவது குறித்துப் பரிசீலித்து வருகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.

