புதுடெல்லி: அதிமுக ஆட்சியில் தமிழகப் போக்குவரத்துத் துறையில் பணி வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றிய புகாரில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தது.
2023ஆம் ஆண்டுக் கைது செய்யப்பட்ட அவர், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாட்சிகளைக் களைக்க மாட்டேன் என வழங்கப்பட்ட உத்தரவாதத்தின் பேரில் உச்சநீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
பிணையில் வெளிவந்த மறுதினமே அவர் தமிழக அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அமைச்சருக்குப் பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து அமலாக்கத் துறையும் வித்யா குமார் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
மனுக்களை நீதிபதி அபயா எஸ் ஓகா தலைமையிலான அமர்வு விசாரித்தது. முந்தைய விசாரணையில், “செந்தில் பாலாஜி அமைச்சராகத் தொடர விரும்புகிறாரா அல்லது அவருக்கு எதிரான இந்த வழக்கை விரைவாக விசாரிக்கலாமா?,” என்று நீதிபதிகள் கேட்டிருந்தனர்.
அதற்குச் செந்தில் பாலாஜித் தரப்பு, “நான் அமைச்சராகத் தொடரக்கூடாது என நீதிமன்றம் கூறவில்லை. நிபந்தனை விதித்தால், பின்பற்றத் தயாராக இருக்கிறேன்,” என பதிலளித்தனர்.
இந்நிலையில் புதன்கிழமையன்று (ஏற்றல் 23) அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, “ஏற்கனவே மூன்று முறை அமைச்சரின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வாய்ப்பு வழங்கினோம். நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உங்களது கடந்த கால செயல்பாடுகள், நீங்கள் அந்த வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயல்களில் ஈடுபட்டதை நிரூபிக்கின்றன,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், “உங்களுக்கு ஜாமின் வழங்கியது, சிறையில் நீங்கள் காட்டிய நன்னடத்தையால் அல்ல. அடிப்படை உரிமை பாதிக்கப்படுகிறது என்ற காரணம் தான். ஆனால், எங்கள் தாராளத்தை தவறாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்,” என அமைச்சரை நீதிபதிகள் சாடினர்.
அதற்கு செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரான கபில் சிபல், “அமைச்சராகப் பதவி ஏற்க மாட்டேன் என செந்தில் பாலாஜி கூறவே இல்லை,” என்றார்.
இதனால் கோபமான நீதிபதிகள், “அப்படியென்றால், உங்களுக்குப் பிணை வழங்கி இருக்கக்கூடாது. அது நாங்கள் செய்த தவறு தான்,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், “உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது பிணை வேண்டுமா என்பதை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் சொல்லுங்கள்,” என்று கூறி விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நீதிபதிகளின் உத்தரவை ஏற்றுக்கொண்ட வழக்கறிஞர் கபில் சிபல், அவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது தான் வாதாடப் போவதில்லையெனவும் நீதிபதிகள் கொடுத்த இரண்டு தெரிவில் ஒன்றைத் தேர்வுசெய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.