தஞ்சை: தனது உதவியாளரைப் பார்த்து, அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் ஒருமையில் திட்டிப்பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து எதிர்க்கட்சியினர் அமைச்சரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமையன்று வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
அப்போது, ‘அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கம்’ என்று குறிப்பிட்டுப் பேசத்தொடங்கிய அவர், திடீரென திரும்பிப் பார்த்து தனது உதவியாளர் பரசுராமனின் பெயரைக் குறிப்பிட்டு, ‘அவன் எங்கே?’ என்று கேட்டுள்ளார்.
இதையடுத்து, வேகமாக வந்த அவரது உதவியாளர் அமைச்சரிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அதற்குள் பொறுமையிழந்த அமைச்சர், ‘நீ என்ன எருமை மாடா? பேப்பர் எங்கே?’ என்று கேட்க, உதவியாளர் அதைக் கொடுத்தபோது, வாங்கிய வேகத்தில் தூக்கி வீசினார்.
அச்சமயம் அமைச்சர் தனக்கு முன்னால் இருந்த மைக்கை அணைக்க மறந்தார்.
அவர் தன் உதவியாளரை பலபேர் முன்னிலையில் எருமை என்று குறிப்பிட்டு ஒருமையில் பேசியது அனைவருக்கும் தெளிவாகக் கேட்டது என்றும் பலரை முகம்சுளிக்க வைத்தது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

