சென்னை: காலஞ்சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) நடைபெற்றது.
ஆனால், இந்நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. இது சர்ச்சையாகியுள்ளது.
சென்னையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக அரசு அதிகாரிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதுபோன்ற நிகழ்வுகளில் மாநில அமைச்சர்கள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் எந்த அமைச்சரும் பங்கேற்கவில்லை.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த அதிமுகவினர் சமூக ஊடகங்களில் திமுக தலைமையையும் அக்கட்சித் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

