சென்னை: தமிழகத்தில் ஒமைக்ரான் வகையிலான கொரோனா தொற்றுப் பரவி வருகிறது. ஆனால், கொரோனா குறித்து யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இப்போது 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று குறித்து யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
கொரோனா உருமாற்றம் பெற்று வருகிறது. ஆனாலும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. நுரையீரல், இதயம் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் முகக் கவசம் அணிவது நல்லது.
புனே ஆய்வு மையத்துக்கு இதுவரை 17 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுவாகவே மக்கள் கைக்கழுவுதல், முகக்கவசம், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது நல்லது.
நெரிசல்மிகு இடங்களுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக் கவசம் அணிவது நல்லது. ஆனால் எதுவுமே கட்டாயமில்லை. நல்லதுதான் என்றார் அமைச்சர்.
சென்னைக்கு அருகே மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயது ஆடவர் ஒருவர், கொரோனா பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 29.5.2025ஆம் தேதி இறந்ததாகக் கூறப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் சுப்பிரமணியம், “அவர் கொரோனாவால் இறந்தாரா என்றால், இல்லை, அவருக்கு ஏற்கெனவே இருந்த உடல்நலப் பிரச்சினையால் இறந்திருக்கிறார். அவருக்கு நாள்பட்ட கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோய் இருந்துள்ளது என்றார்.

