பெரிய கோயிலில் காணாமல்போன சிலைகள்: ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

பெரிய கோயிலில் காணாமல்போன சிலைகள்: ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

1 mins read
fa936b0f-1bc7-4717-a39a-74849ba5cce1
சிலைகள் இருந்ததாகக் கூறப்படும் இடங்களை ஆராய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - படம்: தினமணி

மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் அஷ்டதிக் பாலகர்கள் சன்னிதிகளை பராமரிக்க, சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக, புது சிலைகளை நிறுவ தாக்கலான வழக்கில் அறநிலையத்துறை, தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தர உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், புத்தனேந்தல் பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில், இந்திரன் சன்னிதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் இந்திரன் சிலையை மீட்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் பிறப்பித்த உத்தரவில், தஞ்சாவூர் அறநிலையத்துறை இணை ஆணையர், மத்திய தொல்லியல்துறை திருச்சி உதவி கண்காணிப்பு அலுவலர், கோவிலின் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே ஆகியோர் இணைந்து கோவிலில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

“பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சர்ச்சைக்குரிய இடத்தில் முன்பு எட்டு சிலைகள் இருந்ததாகக் கூறப்படும் பகுதிகளைக் கண்டறிய வேண்டும். அந்த இடங்களை புகைப்படமாகப் பதிவு செய்ய வேண்டும். ஆய்வறிக்கையை ஜூலை 28ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்,” என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்