இனி பாதுகாப்பாகப் பயணம் செய்யலாம்: ஆட்டோக்களுக்கு கியூஆர் குறியீடு அறிமுகம்

2 mins read
bb92e52c-4263-41b9-bf47-effd9b5ccee2
அண்மைய கணக்கெடுப்பின்படி, சென்னையில் நாள்தோறும் ஏறக்குறைய 89 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. - படம்: ஊடகம்

சென்னை: பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஓர் அங்கமாக, சென்னையில் இயக்கப்படும் அனைத்து ஆட்டோக்கள், வாடகை வாகனங்களிலும் இனி கியூஆர் (QR) குறியீட்டு முறையைப் பின்பற்ற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் மூலம் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள முடியும் என்றும் அவசர காலத்தில் காவல்துறையை எளிதில் தொடர்புகொள்ள இயலும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதிய கியூஆர் (QR) குறியீட்டு முறையை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

சென்னையில் உள்ள ஆட்டோக்கள் மட்டுமல்லாமல், காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

அண்மைய கணக்கெடுப்பின்படி. சென்னையில் நாள்தோறும் ஏறக்குறைய 89 ஆயிரம் ஆட்டோக்கள் இயக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

ஆட்டோக்களுடன் தொடர்புள்ள குற்றச்சம்பவங்கள் நிகழும்போது, குறிப்பிட்ட ஆட்டோ எங்குள்ளது என்பதைக் கண்டறிய தாமதமாவதுடன், காவல்துறைக்கு மேலும் சில சிரமங்கள் ஏற்படுகின்றன.

இதையடுத்து, பயணிகள், ஆட்டோ ஓட்டுநரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கியூஆர் குறியீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி அனைத்து வாடகை வாகனங்களிலும் ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் கியூஆர் குறியீடு ஒட்டப்பட்டிருக்கும். அவசரக் காலத்தில் அதை வருடினால் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கைத் தகவல் செல்லும். மேலும், பயணிகளின் வேண்டுகோளின் பேரில் பயணத்தின் நிகழ்நேரத்தையும் கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அந்த வாகனம் எங்குள்ளது என்பதை எளிதில் கண்டறிய முடியும். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கியூஆர் குறியீடுகளை வழங்கினார்.

குறிப்புச் சொற்கள்