மதுரை: தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேனை அறிமுகம் செய்துள்ளது.
வேன் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் (ஜூலை 29, 30) மதுரைக்கு அருகில் உள்ள அழகர் கோயிலில் நிறுத்தப்பட்டிருக்கும். பின்னர் அது மற்றப் பகுதிகளுக்குச் செல்லும் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம் தெரிவித்தது.
கிராமப்புறங்களில் வசிப்போரின் வீடுகளுக்கு அருகிலேயே சென்று கடப்பிதழ்ச் சேவைகளை நடமாடும் வேன் வழங்கும்.
கைரேகை உணர்கருவிகள், நிழற்படக் கருவிகள், மின்னுற்பத்தி இயந்திரங்கள் முதலிய வசதிகள் அதில் உள்ளன. இரண்டு நாள்களில் கிட்டத்தட்ட 80 கடப்பிதழ்களை அங்கு உருவாக்கமுடியும்.
விண்ணப்பதாரர்கள் முன்கூட்டியே கடப்பிதழ்ச் சேவை இணையத்தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் முதன்முதலாக நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேன் கோயம்புத்தூரில் இவ்வாண்டு ஜனவரி மாதம் அறிமுகம் கண்டது.
மதுரை வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் 2007ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தெற்கே உள்ள பத்து மாவட்டங்களுக்கு அது சேவை வழங்குகிறது.