சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்

1 mins read
9d6175e5-e421-4aa8-8862-02bd08784fbb
முதற்கட்டமாகப் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின்கீழ், நகரின் 11 முக்கியமான இடங்களில் அவை அமையவுள்ளன. - படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: சென்னையில் 11 இடங்களில் நவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்காகச் சென்னை மாநகராட்சி, பெருநிறுவனங்கள் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சிப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணியின் ஓர் அங்கமாக, பொதுமக்கள், பயணிகளின் வசதிக்காகப் பாதுகாப்புடன் கூடிய அதிநவீன குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன.

முதற்கட்டமாகப் பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பு நிதியின்கீழ், நகரின் 11 முக்கியமான இடங்களில் அவை அமையவுள்ளன.

அண்ணாசாலை டிஎம்எஸ், மயிலாப்பூர், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் முனையம், வடபழனி சிம்ஸ் மருத்துவமனை வழி, கிண்டி சின்னமலை, ஆற்காடு சாலை ஆவிச்சி பள்ளி, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு-தெற்கு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மாநகராட்சி ஆணையர் ஜிஎஸ் சமீரன், காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகின.

இந்தப் புதிய பேருந்து நிறுத்தங்களில் பயணிகள் காத்திருப்பு அறை, 24 மணி நேர கண்காணிப்பு கேமரா அமைப்பு, இலவச இணைய இணைப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளப்பாதை, பேருந்து வழித்தட வழிகாட்டித் திரைகள், உயர்தர மின்விளக்குகள், வெப்பத்தைத் தாங்கும் கூரை, கைப்பேசி மின்னூட்டும் வசதி எனப் பல்வேறு நவீன வசதிகள் இடம்பெற உள்ளன.

குறிப்புச் சொற்கள்