பட்டினப்பாக்கத்தில் 15 தளங்களைக் கொண்ட நவீன ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்: அரசு

பட்டினப்பாக்கத்தில் 15 தளங்களைக் கொண்ட நவீன ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்: அரசு

2 mins read
cca19c93-bf3c-4a48-8abf-9231bda79660
ஒரே இடத்தில் போதுமான பரப்பளவு கிடைப்பதாலும் உகந்த அமைவிடம் என்பதாலும் பட்டினப்பாக்கம் பகுதி இறுதி செய்யப்பட்டதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. - கோப்புப் படம்: இந்து தமிழ் திசை
Google News Preferred Icon

சென்னை: தமிழக அரசின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம், சட்டமன்ற வளாகத்தை அமைக்கத் தென் சென்னையில் உள்ள பட்டினப்பாக்கம் (ஃபோர்ஷோர் எஸ்டேட்) பகுதியைத் தமிழக அரசு தேர்வு செய்துள்ளது.

தற்போது தலைமைச் செயலகமும் சட்டமன்றமும் புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வருகின்றன. ராணுவத்திற்குச் சொந்தமான, இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பாரம்பரியமிக்க கோட்டைப் பகுதியில், தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்வதற்கோ கூடுதல் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கோ தொல்லியல் துறை அனுமதி அளிப்பதில்லை. இதன் காரணமாக, அங்கு கடும் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, ஏறத்தாழ ரூ.2,000 கோடி சந்தை மதிப்பு கொண்ட பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள 25.16 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலம் தமிழ்நாட்டின் வீட்டு வசதி வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. சென்னை மாநகராட்சியும் அதன் அருகே உள்ள ஒரு ஏக்கர் நிலத்தை வழங்க இசைவு தெரிவித்துள்ளது.

அண்மையில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இத்திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

முன்னதாக, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம், நந்தம்பாக்கம் ‘ஃபின்டெக் சிட்டி’ ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாகச் சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், ஒரே இடத்தில் போதுமான பரப்பளவு கிடைப்பதாலும் உகந்த அமைவிடம் என்பதாலும் பட்டினப்பாக்கம் பகுதி இறுதி செய்யப்பட்டதாகத் தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இத்திட்டத்திற்கான நிர்வாக ஒப்புதல் விரைவில் வழங்கப்பட்டு, விரிவான திட்டப் பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அந்தப் புதிய வளாகம் அமைவதன் மூலம் அனைத்து அரசுத் துறைகளும் ஒரே கூரையின் கீழ் இயங்கவும் பொதுமக்களுக்கான நிர்வாகச் சேவைகள் மேலும் திறம்பட செயல்படவும் வழிவகை ஏற்படும் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

மொத்தம் 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில் 15 தளங்களைக் கொண்ட நவீன ஒருங்கிணைந்த தலைமைச் செயலக வளாகம், ரூ. 1,200 கோடி செலவில் அமைய உள்ளது.

குறிப்புச் சொற்கள்