சென்னை: ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மூன்று மாதங்களுக்கான சொகுசுக் கப்பல் சுற்றுலாப் பயணம் சென்னை துறைமுகத்தில் இருந்து தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த ஏதுவாக உலகத்தரம் வாய்ந்த கட்டமைப்புடன் அதிநவீன பயணிகள் முனையம் சனிக்கிழமை (ஜூன் 20) திறந்து வைக்கப்பட்டது.
அம்முனையத்திற்கு 1,800 பேருடன் வந்த பிரம்மாண்ட சொகுசுச் கப்பலைத் துறைமுக ஊழியர்கள் உள்ளிட்டோர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னை துறைமுகத்தில் காத்திருந்த அடுத்த 1,800 பயணிகள் அதே கப்பலில் தங்களது பயணத்தைத் தொடங்கினர்.
இதன் மூலம் ஒரே நாளில் 3,600 சுற்றுலாப் பயணிகளைக் கையாண்டு சென்னை துறைமுகம் சாதனை படைத்துள்ளது.
சென்னை துறைமுகம் தென்னிந்தியாவின் முதன்மை நுழைவு வாயிலாக விளங்குகிறது. தற்போது அமைக்கப்பட்டுள்ள புதிய முனையமானது ஏறக்குறைய 4,000 சதுர மீட்டர் பரப்பளவுடன் ஒரு மணி நேரத்திற்கு 800 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் முழுமையான குளிரூட்டப்பட்ட வசதியுடனான சுங்கத்துறை, குடியுரிமை சோதனைகளுக்கான ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர வசதி உள்ளது எனத் துறைமுக நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், அதிநவீன ஓய்வறைகள், நகரும் படிக்கட்டுகள், உணவகம் எனப் பயணிகளைப் பரவசப்படுத்தப் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகத் துறைமுக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுலாப் பயணத்திற்கு உகந்த காலகட்டமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலம் அடையாளம் காணப்பட்டுள்ளன நிலையில் ‘எம்வி-எம்ப்ரஸ்’ (MV Empress) என்ற தனியார் சொகுசுக் கப்பல் சென்னை வந்தடைந்துள்ளது.
அதில் வந்திறங்கிய 1,800 பயணிகளுக்கும் தமிழகப் பாரம்பரிய கலாசாரத்தைப் பின்பற்றிச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையின் ஹம்பந்தோட்டா, திரிகோணமலை, காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களுக்கும், இந்தியாவின் புதுவை, விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கும் சொகுசுக் கப்பல் இயக்கப்பட உள்ளது என்றும் சென்னை துறைமுக நிர்வாகம் தெரிவித்தது.
உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், தமிழகத்தின் விருந்தோம்பலையும் இணைத்து சென்னை துறைமுகத்தை உலகளாவிய சொகுசுக் கப்பல் வரைபடத்தில் முன்னிலைப்படுத்த இந்தச் சுற்றுலாப் பயணக் காலகட்டம் உதவும் என்று அந்நிர்வாகம் அறிக்கை ஒன்றில் மேலும் தெரிவித்துள்ளது.


