சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தவும் புதுவகைக் குற்றங்களை எதிர்கொள்ளவும் காவல்துறையை நவீனமயமாக்கும் வகையில், ரூ.212.58 கோடி செலவில் புதிய ஆயுதங்கள், அதிநவீனக் கருவிகள் வாங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தகவல் தொடர்புக் கருவிகளை மேம்படுத்த அதிகபட்சமாக ரூ.99.03 கோடியும் அவசரகாலச் சுற்றுக்காவல் பணிகளுக்காக ரூ.55 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுக்காவல் பணிகளை விரைவுபடுத்தும் வகையில் புதிதாக 500 நவீன வாகனங்கள் வாங்கப்பட உள்ளன.
காவல்துறையின் உளவு, தாக்குதல் திறனை அதிகரிக்கும் பொருட்டு, தமிழ்நாடு சிறப்புக் காவல்படைக்கு பகல்-இரவு பார்வைக் கண்ணாடிகளுடன் கூடிய கொண்ட 12 ‘ஸ்னைப்பர்’ துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளுக்காக ரூ.3.50 கோடியில் ஏழு அதிநவீன வெப்பப் படிமங்களைப் பதிவுசெய்யும் படக்கருவிகள், ஒலிபெருக்கிகளுடன் கூடிய நவீன ஆளில்லா வானூர்திகளும் வாங்கப்பட உள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் திறன்மிகு கண்காணிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.15.67 கோடி செலவில் முக்கியப் பகுதிகளில் அதிநவீன படக்கருவிகள் பொருத்தப்பட உள்ளன.
இணையக் குற்றங்களைத் தடுக்க 46 இணையக் குற்றப்பிரிவு காவல் நிலையங்களும் 877 காவல் நிலையங்களில் மையப்படுத்தப்பட்ட கண்காணிப்பு வசதிகளும் ரூ.11.59 கோடியில் அமைக்கப்படும்.
அதேபோல், தடயவியல் புலனாய்வை வலுப்படுத்த ரூ.22.87 கோடியில் 22 நடமாடும் புலனாய்வு வாகனங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
