புதுடெல்லி: ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவர் எனப் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு எடுத்துக்காட்டாக திருவள்ளுவர் திகழ்வதாக தமது எக்ஸ் தளப்பதிவில் இந்தியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கமும் கருணையும் நிறைந்த ஒரு சமூகத்தின் மீது திருவள்ளுவர் நம்பிக்கை வைத்திருந்தார் என்றும் திருவள்ளுவப் பெருந்தகையின் சிறப்பான அறிவாற்றலை வெளிப்படுத்தும் திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்றும் திரு மோடி கூறியுள்ளார். திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவருக்குத் தாம் மரியாதை செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் புகழாராம் சூட்டியுள்ளார்.
இது குறித்து தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈராயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய் உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தொகையைப் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர் ஐயன் திருவள்ளுவர் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், அனைவரது வாழ்வும் வள்ளுவர் சொன்ன அறவழியில் அமையட்டும் என்று கூறியுள்ளார்.

