தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அறிவிக்கப்படாத நெருக்கடி நிலைக்கு மோடி வழிவகுக்கிறார்: செல்வப்பெருந்தகை

2 mins read
2b8b41cc-a452-4399-9c94-e0c91388605d
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அசாதாரண சூழலில், அரசமைப்புச் சட்டத்தின் அனுமதியோடு நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தின் அனுமதியின்றி அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை தற்போது நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை.

“ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படும் நாடாளுமன்றம், நீதித்துறை, பத்திரிகை சுதந்திரம், தனிமனித உரிமைகள் மறுக்கப்பட்டு கடுமையான அடக்குமுறைகளுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

“மதச்சார்பின்மையும் தனிமனித உரிமைகளும் சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், நீதிமன்றங்களின் தனித்தன்மை பலவீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்சிக்கு எதிராக ‘உபா’ சட்டம் பாய்கிறது. அவர்கள் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் மூலம் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டது.

தேர்தல் பத்திர நன்கொடைத் திட்டத்தின் மூலம் மொத்த நிதியில் 60 விழுக்காட்டிற்கும் மேலாக நிதி திரட்டி தேர்தல் களத்தில் பாஜக தனக்குச் சாதகமான சூழலை உருவாக்கி வருகிறது.

பாஜகவின் கைப்பாவையான தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணைய அதிகாரிகளை நியமிப்பதில், சட்டத் திருத்தத்தின் மூலம் தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதியை விலக்கி விட்டு, தங்களுக்கு வேண்டியவர்களைப் பதவியில் நியமிப்பதால், தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாகும் நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதன்மூலம், தேர்தல் வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு, தேர்தல் தேதிகள் அறிவிப்பதில் பாரபட்சம் என பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்திய அரசியலமைப்பு தந்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மூலம் உறுதி செய்யப்பட்ட பன்முக கலாசாரம், மதச்சார்பின்மை, சகோதர உணர்வு, தனிமனித உரிமைகள் ஆகியவை சட்டவிரோதமாக, சட்டத்தின் அனுமதியில்லாமல் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டு வருகிறது என்று திரு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்