சென்னை: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியும் அடுத்தடுத்து தமிழகத்துக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.
இரு தலைவர்களும் வந்துசென்ற பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையேயான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையடுத்து, சென்னையின் சில பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அவை காவல்துறையின் தீவிரக் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அன்றிரவு சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கும் அவர், மறுநாள் மதுரையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
மேலும், திருப்பரங்குன்றம் கோவிலுக்கும் அவர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் வருகையையொட்டி சென்னையிலும் மதுரையிலும் ‘டிரோன்’கள், ‘பாராகிளைடர்’கள், வெப்ப பலூன்கள் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் டெல்லி திரும்பிய பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தமிழகத்தில் தலைமையேற்றுள்ள அதிமுகவுடன் தொகுதிப்பங்கீடு குறித்துப் பேசப்படும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 5ம் தேதி தமிழகம் வர இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
காங்கிரஸ்-திமுக இடையே இன்னும் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. எனினும், ராகுல் காந்தி வருகைக்கு முன்னதாக தொகுதிப்பங்கீடு சுமூகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மார்ச் 5ஆம் தேதி சென்னை வரும் ராகுல் காந்தி, அன்றைய தினம் தமிழக காங்கிரஸ் சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் திமுக தலைவர்களைச் சந்திப்பாரா என்பது குறித்து தகவல் ஏதுமில்லை.

