சென்னை: இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா உட்பட ஐவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவர், வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் தமிழ்ப் பெண்மணி என்ற பெருமையைப் பெறுகிறார்.
அவருடன் சேர்த்து ஷீல் நகு, சஞ்சீவ் சச்தேவா, அருண் பள்ளி ஆகியோரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம் செய்யப்பட்டதற்குத் தமிழக முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்,“உச்ச நீதிமன்றப் புதிய நீதிபதியாகத் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வெங்கிட சுப்பிரமணி மோகனா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகக் கூறினார்.
மேலும், “உச்ச நீதிமன்ற வரலாற்றில், மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றி நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் என்ற பெருமையையும் தமிழகத்தைச் சேர்ந்த முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். வெங்கிட சுப்பிரமணி மோகனாவின் நியமனம் பெண் கல்வி முன்னேற்றத்திற்கும் பொருளியல் முன்னேற்றத்திற்கும் உந்து சக்தியாகத் திகழும்,” என்றார் அவர்.
உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கவிருக்கும் அவர்களுக்குத் தம் சார்பிலும், தமிழக அரசின் சார்பிலும், தமிழக மக்களின் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என நெகிழ்ச்சியுடன் அவர் பதிவிட்டிருந்தார்.

