போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க தமிழக மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைப்பு

1 mins read
2c420702-ec39-42f7-95c6-aadb62e32fbe
பல மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரம் கடற்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 67 கிலோ போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். - படம்: ஊடகம்

சென்னை: போதைப் பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் தமிழக மீனவ கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்குப் போதைப் பொருள் கடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த கடத்தலுக்கான நுழைவாயிலாக தமிழகம் மாறி வருவதாக மத்திய உளவுத்துறை ஏற்கெனவே எச்சரித்திருந்தது.

இதையடுத்து மத்திய, மாநில காவல்துறையினர் இணைந்து மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள திருவொற்றியூர் பகுதி தொடங்கி, ராமேசுவரம் வரை உள்ள மீனவ கிராமங்களில் இந்தக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடத்தல்காரர்கள் பதுங்கியிருக்கவும் மிக எளிதில் கடலுக்குள் நுழைந்து வெளியேறவும் மீனவக் கிராமங்கள் வசதியாக உள்ளன. மேலும் மீன்பிடிப் படகுகளும்கூட போதைப் பொருள் கடத்தலுக்கு வெகுவாக உதவுகின்றன. கடத்தப்படும் போதைப் பொருள்களை சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கின்றனர்.

பின்னர் ராமநாதபுரம், மண்டபம் முகாம் ஆகிய பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதியாக இலங்கைக்கு கடத்தப்படுகின்றன என்கிறார்கள் காவல்துறையினர்.

எனவேதான் மீனவக் கிராமங்களைச் சேர்ந்த இளையர்கள், காவல்துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றும் அதற்கான நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகிறது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்