தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கொடைக்கானலில் 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கவிட்டு விளையாடிய குரங்கு

1 mins read
6668a6b6-f3d7-45fb-a4ec-3a1bbf49b830
கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியின் கைப்பையைப் பறித்துக் கொண்ட குரங்கு, அதிலிருந்த ரூ.500 கட்டை எடுத்து பிரித்துப் பறக்கவிட்டது. - காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட படம்.

கொடைக்கானல்: கோடைக்காலத்தின்போது சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க குளுகுளுவென இருக்கும் கொடைக்கானலுக்குச் சுற்றுப் பயணிகள் வருவது அதிகரிக்கும்.

அதுபோல் இந்தக் கோடையிலும் அங்கு சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அங்கு சுற்றுலாப் பயணி ஒருவர் சாலையோரக் கடையில் ஏதோ பொருள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது, கைப்பையில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அதை அருகில் இருந்து நோட்டமிட்ட ஒரு குரங்கு ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அவரிடம் இருந்த கைப்பையைப் பற்றிக்கொண்டு பறந்தது.

மரத்தின் உச்சிக்குச் சென்ற குரங்கு, ஓர் இடத்தில் உட்கார்ந்தவாறு அந்தக் கைப்பைக்குள் கையைவிட்டு உள்ளே இருந்த பண நோட்டுக் கட்டை வெளியே எடுத்துப் பார்த்தது. அதைச் சாப்பிடவும் முடியாது. பிறகு என்ன செய்வது என்று எண்ணி, அதை ஒவ்வொன்றாகப் பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தது.

500 ரூபாய் நோட்டுக் கட்டில் இருந்து ஒவ்வொன்றாக எடுத்துப் பறக்கவிடும் காட்சியைக் கொண்ட காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.

அந்தச் சம்பவத்தை பலர், காணொளி எடுத்தனர். சிலரோ, குரங்கு பறக்கவிட்ட 500 ரூபாய் நோட்டைத் தேடி ஓடினர். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் உடைமைகளைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டே அச்சத்துடன் செல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்