தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விமானப் பயணிகளிடம் ஆகஸ்ட் 21 முதல் `குரங்கம்மை’ பரிசோதனை: மா.சுப்பிரமணியன்

2 mins read
59413745-f6be-417c-a288-750c755fc510
குரங்கம்மை எனப்படும் எம்பாக்ஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. - படங்கள்: தமிழக ஊடகம்

சென்னை: எம்பாக்ஸ் எனப்படும் குரங்கம்மைத் தொற்று ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக காங்கோ நாட்டில் வேகமாகப் பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த பொதுச் சுகாதார அவசர நிலையை உலகச் சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் விழிப்புடன் இருக்க அறிவுறித்தி இருப்பதோடு, வழிகாட்டி நெறிமுறைகளையும் வகுத்துள்ளது.

இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கம்மை தொற்று விமானப் பயணிகள் மூலம் மற்ற நாடுகளிலும் பரவ வாய்ப்பு இருக்கிறது.

“எனவே ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளைக் கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் முகாம் தொடங்கப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடி விமானச் சேவை இல்லாவிட்டாலும் தொடர் பயணங்கள் மூலம் வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவார்கள்.

“ஸ்கேனிங்’, ஸ்கிரீனிங் சோதனைகள் நடத்தப்படும். குரங்கம்மையின் அறிகுறியான கொப்புளங்கள் கண்டறியப்பட்டால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

தொற்று ஏற்பட்டு ஐந்திலிருந்து 21 நாள்களில் இதன் அறிகுறிகள் உடலில் வெளிப்படும். அம்மை நோய் வந்தால் எப்படி உடல் முழுவதும் கொப்புளங்கள் தோன்றுமோ அதே போல்தான் வரும்.

கூடவே காய்ச்சல், இருமல், உடல் வலியும் இருக்கும். அந்தக் கொப்புளங்கள் அம்மை நோயை போலவே 4 வாரங்களுக்குள் காய்ந்து விழுந்து விடும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், பாலியல் நோய் உடையவர்கள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்குத் தாக்குதல் தீவிரமாக இருக்கும். நுரையீரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், பார்வை குறைபாட்டையும் ஏற்படுத்தும் என்கிறார்கள்.

மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் நிபுணர்கள்.

மேலும், இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவரின் எச்சில் மற்றும் விந்து வழியாக பரவும், உடல் முழுவதும் தோன்றிய கொப்புளங்கள் காய்ந்து முற்றிலுமாக குணமாகும் வரை அடுத்தவருக்கு பரவலாம் என்கிறார்கள்.

‘குரங்கம்மை புதிய கொவிட்-19 பரவலன்று’

குரங்கம்மைப் பரவலானது புதிய கொவிட்-19 தொற்றுப் பரவலன்று என உலகச் சுகாதார நிறுவன அதிகாரி மீண்டும் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

குரங்கம்மைக் கிருமியின் திரிபு புதியதோ அல்லது பழையதோ எதுவாக இருந்தாலும், அது புதிய கொவிட்-19 பரவல் கிடையாது என்ற என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பாவிற்கான வட்டார இயக்குநர் டாக்டர் ஹன்ஸ் குளூக தெரிவித்தார்.

“குரங்கம்மையை எதிர்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம். குரங்கம்மையைக் கட்டுப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறோம் என்பதுதான் இப்போதைக்கு நம்முன் உள்ள முக்கிய சவால்,” என்றார் டாக்டர் குளூக.

குறிப்புச் சொற்கள்