சென்னை: தமிழ்நாட்டின் சொந்த வரி, வரியில்லாத வருவாயை உயர்த்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட பொருளாதார நிபுணர் மாண்டேக்சிங் அலுவாலியா தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர் முதல்வரைச் சந்தித்தனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யைச் சந்தித்து, மாநிலத்தின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது, புதிய வருவாய் வழிகளைக் கண்டறிவது குறித்து இக்குழுவினர் விரிவாக ஆலோசனை நடத்தினர்.
இக்குழுவில் பொருளியல் நிபுணர் கே.பி.கிருஷ்ணன், அர்பிந்த் மோடி, நஜீப் ஷா, நிதித்துறைச் செயலர் எம்.ஏ.சித்திக் மற்றும் எம்.சுரேஷ் பாபு ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனக் கூட்டரங்கில் இக்குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
இக்கூட்டத்தில் வணிக வரிகள், பதிவுத் துறை, மதுவிலக்கு, நிலவளத் துறை, அரசு பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் சார்பில் விரிவான விளக்கக்காட்சிகள் அளிக்கப்பட்டன.
நீண்டகாலமாக நிலவிவரும் நிர்வாக இடர்ப்பாடுகள், வரி ஏய்ப்பு, வருவாய் இழப்புகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு குறுகிய, நீண்டகாலச் சீர்திருத்த நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
பொதுமக்கள், கல்வியாளர்கள், துறைசார் சங்கங்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல் ஆலோசனைகள் பதிவு செய்யப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கும் காலவரையறை குறித்தும் விவாதிக்கப்பட்டது.


