கொசுத்தொல்லை இல்லாத சென்னை: மாநகராட்சியின் புதுத்திட்டம்

கொசுத்தொல்லை இல்லாத சென்னை: மாநகராட்சியின் புதுத்திட்டம்

2 mins read
7511f4f2-3f1a-4c09-8305-22f78020c0e3
கடந்த ஆண்டுகளில் இயந்திரத் தெளிப்பான், சிறு சரக்கு வாகனங்களில் ‘மோட்டார் பம்ப்’, ஆளில்லா வானூர்திகள் மூலம் மருந்து தெளித்தல் ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. - கோப்புப் படம்: சமயம் தமிழ்
multi-img1 of 2
Google News Preferred Icon

சென்னை: ‘கொசுத்தொல்லை இல்லாத சென்னை’ என்ற புதிய இலக்குடன் சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கை மாநகர மக்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சென்னை முழுவதும் கொசு ஒழிப்புப் பணியில் 3,592 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 2,073 பேர் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணியை மேற்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சியின் பூச்சித் தடுப்புப் பிரிவு செய்து வருகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே கொசுத்தொல்லை அதிகமாக இருந்த நிலையில், தற்போது மேலும் பல பகுதிகள் இணைந்துள்ளன.

கடந்த ஆண்டுகளில் இயந்திரத் தெளிப்பான், சிறு சரக்கு வாகனங்களில் ‘மோட்டார் பம்ப்’, ஆளில்லா வானூர்திகள் மூலம் மருந்து தெளித்தல் ஆகிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டன.

தற்போது கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு அரசு ரூ.19 கோடி ஒதுக்குகிறது. அதில் கொசு ஒழிப்பு மருந்து வாங்க ரூ.8 கோடியும் இதர பணிகளுக்கு ரூ.11 கோடியும் செலவாகிறது.

எனினும் கொசு மருந்து, அதிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையால் ஆஸ்துமா (மூச்சுத் திணறல்) உள்ளவர்களும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இந்நிலையில், புதிய கொசு ஒழிப்புத் திட்டம் சோதனை முறையில் சென்னையில் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சியின் பூச்சிகள் தடுப்புப்பிரிவு அலுவலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழக அளவில் சென்னையில்தான் இந்தத் திட்டம் முதன்முதலில் அறிமுகமாகியுள்ளது. இந்தப் புதிய திட்டத்தின்கீழ் கொசு ஒழிப்புப் பணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தண்ணீரில் கொசு மருந்து கலந்து தெளிக்கும் புதிய கொசு ஒழிப்புத் திட்டம், இந்தியாவில் சென்னை மாநகராட்சியில்தான் முதன்முதலாக அறிமுகமாகிறது என்று ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவன அலுவலர் பழனி கூறியுள்ளார்.

இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் கொசுக்கள் அறவே இல்லாத சென்னை என்ற மக்களின் விருப்பம் சாத்தியமாகக்கூடும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இத்திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளுக்குப் பின்னர், சென்னையில் கொசுத் தொல்லை வெகுவாகக் குறைந்துள்ளது என்றும் கடந்த ஆறு மாதங்களில் கொசுத் தொல்லை தொடர்பாக மாநகராட்சிக்கு வந்துள்ள புகார்களின் எண்ணிக்கை முதன்முறையாக இரட்டை இலக்கங்களில் பதிவாகியுள்ளது என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்