சேலம்: வீடு வீடாகச் சென்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாயும் மகனும் சேலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. கல்வி நிலையங்கள், கோவில்களுக்கு அருகில் உள்ள பகுதிகளிலும்கூட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சேலத்தில் பூங்கொடி என்பவர், தன் மகன் சந்தோஷுடன் சேர்ந்து, வீடு வீடாகச் சென்று கஞ்சா விற்பதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறையினர் விரைவாக விசாரணை மேற்கொண்டு, ஓமலூர் பகுதியில் இருவரையும் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடம் இருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் கல்வி நிலையங்கள் அருகே கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
ஓமலூரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய முயன்றபோதே இருவரும் பிடிபட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.