நாமக்கல்: நாமக்கல்லில் தண்ணீர்த் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார், 32. ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி இந்துமதி, 29. இவர்களுக்கு, யாத்விக் ஆரியன், 3, நிவின், 1, ஆகிய இரு குழந்தைகள் உண்டு.
வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள குலதெய்வக் கோயிலுக்குச் சாமி கும்பிடுவதற்காக, இந்துமதி தனது குழந்தைகளுடன், நாமக்கல் போதுப்பட்டி அண்ணா நகர் காலனியில் உள்ள தாய் பாவாயி (54) வீட்டிற்கு வந்திருந்தார்.
இந்த நிலையில், அவருடைய வீட்டில் உள்ள சுமார் எட்டு அடி ஆழம் கொண்ட நல்ல தண்ணீர் தொட்டியில், யாத்விக் ஆரியன் நீரில் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தார். பாவாயி குழந்தையைத் தேடிய நிலையில் நீரில் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த குழந்தையை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், இந்துமதி மற்றும் நிவினை, பாவாயி மற்றும் உறவினர்கள் தேடிய நிலையில், அவர்களும் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மூவரின் உடல்களையும் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து நாமக்கல் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.