சென்னை: பஹ்ரேன் நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதன் தொடர்பில் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக அவர்களின் படகு பஹ்ரேன் நாட்டின் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றதால் கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி அந்நாட்டின் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்டனர்.
“கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களையும் விடுவிக்க தூதரக அதிகாரிகள் மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசுக்கும் இந்திய அரசுக்கும் மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையிலும் மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் பஹ்ரேன் நீதிமன்றம் 28 மீனவர்களுக்கும் ஆறு மாதகால சிறைத் தண்டனை விதித்துள்ளது,” என்று கூறியுள்ளார்.
திடீரென்று நிகழ்ந்த இயற்கைச்சூழல் மாற்றத்தால் நிகழ்ந்த எதிர்பாராத தவற்றுக்கு ஆறுமாத காலம் தண்டனை என்பது மிகக் கொடுமையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“ஆகவே, இந்திய அரசு, பஹ்ரேன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைதுசெய்யப்பட்ட 28 மீனவர்களையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்துகிறேன். தமிழக அரசு, மத்திய அரசை வலியுறுத்தி, தூதரகம் மூலம் மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் கிடைப்பதற்கும் மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களிடம் பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்,” என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.

