அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு

1 mins read
ce96a5be-ac86-4de5-92c3-7e6f6b145f53
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டது. - படம்: தமிழக ஊடகம்

விழுப்புரம்: விழுப்புரம் இருவேல்பட்டு பகுதியில் அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகி கரையைக் கடந்த ஃபென்ஜால் புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது.

குறிப்பாக, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருவேல்பட்டு பகுதியில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரசூர், இருவேல்பட்டு மற்றும் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் பொன்முடி சென்றுள்ளார். அவருடன் அவரது மகன் கௌதமசிகாமணி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரும் சென்றுள்ளனர்.

அப்போது அமைச்சர் பொன்முடி காரைவிட்டு இறங்காமல் அங்கிருந்த மக்களுடன் பேசியதாகவும் இதனால் மக்கள் அவர் மீது சேற்றை வீசியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பின்னர் அவர் இறங்கி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து மக்களிடம் பேசிவிட்டுச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்