கோவை: கோவையில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) காலை கடும் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க முடியாமல் ஏர் இந்தியா விமானம் கிட்டத்தட்ட அரை மணி நேரம் வானில் வட்டமடித்தது.
மும்பையில் இருந்து 182 பயணிகளுடன் வந்த கோவை வந்த ஏர் இந்தியா விமானம், 30 நிமிடம் வானில் வட்டமடித்த பின் தரையிறங்கியது.
டெல்லியில் இருந்து வந்த இண்டிகோ விமானம் தரையிறங்க முடியாமல் கொச்சி விமானநிலையத்துக்கு திருப்பி விடப்பட்டது.
கோயம்புத்தூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, டெல்லிக்கு வெள்ளிக்கிழமை காலை புறப்பட்ட அனைத்து விமானங்களும் பனிமூட்டம் காரணமாக தாமதமாகக் கிளம்பின.
“கடுமையான பனிமூட்டமே விமானத் தாமதங்களுக்குக் காரணம். வானிலை தெளிவற்று இருந்ததால் ஒரு விமானம் தரையிறங்குவதற்கு முன் நடுவானில் வட்டமிட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் பல விமானங்கள் தாமதமாகி, ஒன்று திருப்பி விடப்பட்டது. மூடுபனி நீங்கியதும் விமானப் போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது,” என்று கோவை விமான நிலைய இயக்குநர் ஜி.சம்பத் குமார் கூறினார்.
அதேபோல், சென்னையிலும் கடும் பனிமூட்டம் காரணமாகச் சென்னைக்கு வரவேண்டிய ரயில்கள், விமானச் சேவை பாதிக்கப்பட்டது.
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே செல்லும் ரயில்கள், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய விரைவு ரயில்களும் தாமதமாக இயக்கப்படுகின்றன.