பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம்

பாமக பொதுச்செயலாளராக முரளி சங்கர் நியமனம்

1 mins read
39e4b1fd-bfbc-4800-869b-16c00a08bb51
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் பொதுச் செயலாளராக முரளி சங்கரை நியமிப்பதாக அறிவித்துள்ளார். - படம்: ஊடகம்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமனம் செய்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பாமக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து வடிவேல் ராவணனை நீக்கி, முரளி சங்கர் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. பாமக இரண்டு அணியாக பிளவுபடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும் தீர்வு எட்டப்படாத சூழலே நீடிக்கிறது.

இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் கட்சியில் சரியாக செயல்படாதவர்களையும், டாக்டர் அன்புமணி ராமதாசின் ஆதரவாளர்களையும் கட்சியில் இருந்து நீக்கி புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

இதுவரை 60 மாவட்ட செயலாளர்கள், 39 மாவட்ட தலைவர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. ராமதாசால் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களும் மட்டுமே இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் பனையூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் உரையாற்றிய அன்புமணி ராமதாஸ், பொதுக்குழுவை கூட்டி மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க அறிவுறுத்தி இருந்த நிலையில் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் இக்கூட்டம் தொடங்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்