மதுரை: மதுரையில் ஜூன் 22ஆம் தேதி நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த மாநாட்டை ஏற்பாடு செய்யும் இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கிஷோர் குமார் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கின்னஸ் சாதனை படைக்கப்படும் என நம்புவதாக அவர் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
இந்து முன்னணி சார்பில், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில மாநாடு நடைபெறுவது வழக்கம் என்று குறிப்பிட்ட அவர், கடந்த 2018ஆம் ஆண்டு பல்லடத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஒரு லட்சம் குடும்பங்கள் கலந்துகொண்டதாக கூறினார்.
“இந்த மாநாட்டின் சிறப்பம்சமாக, அறுபடை வீடுகளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்யும் வகையில் அருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
“இதைக் காண, கடந்த நான்கு நாள்களில் 50 ஆயிரம் பேர் வந்துள்ளனர். ஜூன் 22 மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படும்.
“கின்னஸ் சாதனை முயற்சியாக 5 லட்சம் பக்தர்கள் ஒன்றாக இணைந்து பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு வளாகம் முழுவதும் 18 எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. கந்த சஷ்டி கவசம் பாட தொடங்கியதும் திரையில் வரிகள் காட்சிப்படுத்தப்படும்.
“மாநாட்டிற்கு வர முடியாதவர்கள் வீடுகளில் இருந்து சரியாக மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடலாம்,” என்றார் கிஷோர் குமார்.